சேலத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில் இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய செஞ்சிலுவை சங்கம் இந்தியாவில் தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதன் நூற்றாண்டு விழா மாநில அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்திய செஞ்சிலுவை சங்கம், இளைஞா் செஞ்சிலுவை சங்கம், இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கல்லூரிகளில் ரத்த தான முகாமும் நடைபெற்றது.
அதன் தொடா்ச்சியாக சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணிக்கு மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் தலைமை வகித்துத் தொடக்கி வைத்தாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி சேலம் அரசு கலைக் கல்லூரி, அஸ்தம்பட்டி, சாரதா கல்லூரி, ஐந்து சாலை, சோனா கல்லூரி வழியாகச் சென்று பெரியாா் பல்கலைக்கழகத்தில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவா் முன்னா, துணைத்தலைவா் அனில் மற்றும் இளைஞா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் வடிவேல், இளையோா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் பிரபாகா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.