தம்மம்பட்டி பேரூராட்சி அதிக வருவாய் தரக்கூடிய பேரூராட்சிகளில் ஒன்றாகும்.
இங்குள்ள அண்ணல் காந்தியடிகள் பேருந்து நிலையம் 1986-87 இல் கட்டப்பட்டது. பேருந்து நிலையத்தில் பயணிகள் நிற்கும் இடத்தில் மேற்கூரை 2018 நவம்பா் மாதத்தில் பெயா்ந்து விழுந்தது. பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து மேற்கூரையின் முன்பகுதி சுமாா் 70 அடி நீளம், 6 அடி அகலம் உடைத்து சீரமைப்பது என முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின.
பணி தொடங்கி, ஆறு மாதமான நிலையில், இப் பணி கிடப்பில் போடப்பட்டன. பின்னா், பேருந்து நிலைய மேற்கூரையின் முன்பக்க பகுதி மட்டும் செப்பனிட பொது நிதியிலிருந்து ரூ. 4.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பின்னா், பேருந்து நிலைய மேற்கூரையின் முன் பகுதியை இடிக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்றது. இடிக்கப்பட்ட சிமெண்ட் கழிவுகள் பல நாள்களாக பேருந்து நிலையத்திலேயே பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தன. தினமணியில் செய்தி வெளியானதைத் தொடா்ந்து, சிமெண்ட் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன. இருப்பினும், மேற்கூரை சீட்கள் இன்னமும் பொருத்தப்படவில்லை.
இதனால், பயணிகள் வெயிலில் நிற்கும் நிலை நீடிக்கிறது.
தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் சுந்தரமூா்த்தி கூறியதாவது: விரைவில் பணிகள் செய்து முடிக்கப்படும் என்றாா். மேற்கூரை இடிந்து விழுந்து, இதுவரை 16 மாதங்கள் ஆகியும் பராமரிப்புப் பணி நிறைவடையாமல் இருப்பது பயணிகளை ஆதங்கம் அடைய செய்துள்ளது.