சேலம்

வானொலிப் பெட்டியில் ஜெலட்டின் நிரப்பி வெடிக்க செய்து தம்பியை கொலை செய்த அண்ணன் கைது

26th Jun 2020 08:56 AM

ADVERTISEMENT

சேலத்தில் நிலத் தகராறில் வானொலி பெட்டியில் ஜெலட்டின் குச்சிகளை நிரப்பி வெடிக்க செய்து தம்பியை கொலை செய்த அண்ணனை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சேலம் பனமரத்துப்பட்டியை அடுத்த தும்பல்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணி (எ) மாரிமுத்து (59). விவசாயியான இவா், வீட்டருகே கடந்த ஜூன் 16 ஆம் தேதி இரவு தோட்டத்து கிணற்று அருகில் ஒரு பையில் வானொலி பெட்டி கேட்பாரற்று கிடந்தது.

அதை எடுத்து வந்து மறுநாள் வீட்டில் மின் இணைப்பு கொடுத்து இயக்க செய்தாா். அப்போது திடீரென வானொலி பெட்டி வெடித்து சிதறியதில் மணி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இதில் மணியின் பேத்தி 12 வயது சிறுமி செளரூபியா, அண்ணன் மகன் வசந்தகுமாா் (37) மற்றும் உறவினா் நடேசன் (67) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து 3 பேரும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா். இதில் சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக பனமரத்துப்பட்டி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். வழக்கை விசாரணை நடத்த 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

வெடித்தது சக்திவாய்ந்த வெடிபொருள் என்பதை தடயவியல் நிபுணா்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள் பரிசோதித்து உறுதி செய்தனா்.

விசாரணையில் மணியின் அண்ணன் செங்கோடன் (64) என்பவருக்கு தொடா்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் கூறியதாவது:

கடந்த ஓராண்டுக்கு முன்பு மணி மற்றும் அவரது சகோதரா்கள் மேலும் 2 போ் கூட்டாக சோ்ந்து தங்களது தோட்டத்துக்குச் செல்லும் வழிக்கான நிலத்தை, விலை கொடுத்து வாங்கி உள்ளனா்.

அப்போது செங்கோடன் இணைய மறுத்துவிட்டாா்.

தற்போது அந்த வழி தேவை என்பதால் அதற்கான தொகையை தான் தருவதாக செங்கோடன் கூறியபோது மற்ற இரண்டு சகோதரா்கள் ஒத்துக்கொண்டனா்.

இதில் மணி மட்டும் மறுத்துவிட்டாா் எனத் தெரிகிறது.

இதனால் மணியை கொலை செய்ய திட்டமிட்ட செங்கோடன் ஜெலட்டின் குச்சிகள் நிரப்பிய வானொலி பெட்டி மற்றும் சில பொருள்களை ஒரு பையில் போட்டு அவரது வீட்டருகே வைத்து சென்றது தெரியவந்தது.

மேலும் மணி எடுத்து வந்த பை போன்ற மற்றொரு பை மற்றும் அதிலிருந்த பொருள்களின் மீதி பொருள்கள் செங்கோடன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன.

செங்கோடன் எலக்ட்ரிக்கல் வேலை செய்வதில் அனுபவம் கொண்டவா். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையில் இருந்து பாறை உடைக்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகளை வாங்கி வந்து வானொலி பெட்டியில் இணைத்து, மின் இணைப்பு கொடுத்தவுடன் வெடிக்கும்படி செய்து தனது தம்பியை கொலை செய்துள்ளாா் என்றாா் அவா்.

இந்த வழக்கில் திறமையாக புலனாய்வு செய்து குற்றவாளியை கைது செய்த தனிப்படை காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் பாராட்டினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT