சேலம்

நாகியம்பட்டியில் 9 பேருக்கு கரோனா

21st Jun 2020 04:27 PM

ADVERTISEMENT

தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி ஊராட்சியில் 9 பேருக்கு கரோனா தொற்று அறிகுறி உறுதியானதையடுத்து, ஊர்முழுவதும் தடுப்புக்கட்டைகள் அமைத்தல், கிருமிநாசினி தெளித்தல் பணிகள் ஒன்றியக்குழுத்தலைவர் தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ளது நாகியம்பட்டி ஊராட்சி, உப்போடைப்புதூர் என்னும் பகுதியைச்சேர்ந்த 4 குடும்பங்களைச் சேர்ந்த 17பேர், ஜீன் 16 மற்றும்19ஆம் தேதிகளில் நாகியம்பட்டிக்கு, சரக்கு வாகனங்களில் மாறி மாறி, சென்னையில் திருவான்மியூர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து நாகியம்பட்டிக்கு திரும்பினர்.

இவர்கள் வந்த தகவல் அக்கம்பக்கத்தினர் மூலம் தம்மம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் சதீஸ்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து 17 பேருக்கும் தம்மம்பட்டி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தினர், கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், 45 வயது முதல் 60 வயது மூன்று பெண்கள், 17 வயது முதல் 40வயது வரையில் 6 ஆண்கள் என மொத்தம் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியென்று ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. அதனையடுத்து, அவர்கள் அனைவரையும் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சை பிரிவிற்கு 2 ஆம்புலன்ஸ்களில் அனுப்பிவைக்கப்பட்டனர். 

ADVERTISEMENT

அதனையடுத்து கெங்கவல்லி ஒன்றியக்குழு தலைவர் பிரியாபாலமுருகன் தலைமையில் கெங்கவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், ஒன்றிய அலுவலக மேலாளர்(திட்டம்)பெரியசாமி, நாகியம்பட்டி ஊராட்சி தலைவர் முத்துராஜா, ஊராட்சி செயலாளர் செந்தில்குமார், விஏஒ செல்லையன் மற்றும் சுகாதாரக்குழுவினர் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

அப்பகுதியை தடுப்புக்கட்டைகள் மூலம் அடைத்தல், நாகியம்பட்டி ஊர் முழுவதும் கிருமிநாசினி தெளித்தல், ப்ளிச்சிங் பவுடர் தெளித்தல் பணிகள் வேகமாக செய்யப்பட்டு வருகிறது. மேலும் நாகியம்பட்டியில் 17 பேரும் கடந்த 5 நாள்களாக சந்தித்த நபர்களைக்கண்டறிந்து, அவர்களுக்கும் பரிசோதனை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாகியம்பட்டி ஊர்முழுவதும் முகக்கவசம் அணிதல், வீட்டிலேயே அனைவரும் இருக்கவும் ஊராட்சி மூலம் தண்டோரா போடப்பட்டுள்ளது. தம்மம்பட்டி காவல்துறையினரும் அப்பகுதியில் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT