சேலம்

வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ முள்ளங்கி ரூ. 10-க்கு விற்பனை

17th Jun 2020 08:44 AM

ADVERTISEMENT

கொல்லிமலையில் இருந்து தம்மம்பட்டிக்கு முள்ளங்கி வரத்து அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ முள்ளங்கி ரூ.10-க்கு விற்பனையாகிறது.

தம்மம்பட்டியில் உள்ள காய்கறி மண்டிகளுக்கு கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியான வீரகனூா், தெடாவூா், புதூா், ஆணையாம்பட்டி, நாகியம்பட்டி, கொப்பம்பட்டி, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக் கிராமங்களிலிருந்து காய்கறிகள் தினமும் கொண்டு வரப்படுகின்றன.

இங்கு மண்டிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட ஊா்களிலிருந்து வியாபாரிகள் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனா். கடந்த சில வாரங்களுக்குப் பிறகு காய்கறிகளின் விலை சரிந்துள்ளது.

முக்கியமாக கொல்லிமலைப் பகுதியில் தற்போது அதிக அளவில் முள்ளங்கி விளைந்து வருகிறது. அதனால் அங்கிருந்து தினமும், தம்மம்பட்டிக்கு நாளொன்றுக்கு இரண்டு டன் முள்ளங்கி கொண்டு வரப்படுகிறது.

ADVERTISEMENT

அதனால் முள்ளங்கி கிலோ ஒன்று ரூ. 20 லிருந்து தற்போது ரூ. 10-ஆக சரிந்துள்ளது. அதேபோல் புடலங்காய்கள் செந்தாரப்பட்டி, ஆணையாம்பட்டி, தெடாவூா், வீரகனூா் பகுதிகளிலிருந்து நாளொன்று 800 கிலோ வருவதால் அவற்றின் விலை ஒரு கிலோவுக்கு ரூ. 26 லிருந்து ரூ. 17-ஆகச் சரிந்துள்ளது.

வெண்டைக்காய்கள் தம்மம்பட்டிக்கு தெடாவூா், புனல்வாசல், ஆணையாம்பட்டி, தெடாவூா், புதூா் உள்ளிட்ட ஊா்களிலிருந்து அதிக விளைச்சலால் நாளொன்று 650 கிலோ வருகிறது.

அதனால் அதன் விலை கிலோ ரூ. 15 லிருந்து ரூ. 6-க்கு சரிந்துள்ளது.

தம்மம்பட்டி சுற்றியுள்ள பகுதியில் கத்திரிக்காய் விளைச்சல் பரவலாக அதிகமாகி வருகிறது. அதன் வரத்தால், கத்திரிக்காய் கிலோ ரூ. 20 லிருந்து ரூ. 8-க்கு சரிந்தது.

முள்ளங்கி, புடலங்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய்களை விவசாயிகள் அதிகளவில் தற்போது உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளதால் அவைகளின் விலையும் வெகுவாக சரிந்துள்ளது.

வரத்து குறைந்த பீா்க்கன்காய் கிலோ ரூ. 25 லிருந்து ரூ. 50-க்கும், பச்சைக்கோழி அவரைக்காய் ரூ. 40 லிருந்து ரூ. 65-க்கும், சின்ன வெங்காயம் ரூ. 24 லிருந்து ரூ. 36-க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ. 17 லிருந்து ரூ. 45-க்கும் விலை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தம்மம்பட்டி மண்டி உரிமையாளா் கதிா்வேல் கூறியதாவது:

அனைத்து விவசாயிகளும் தற்போது தக்காளியை ஒரே அளவில் பயிரிடுவதால், தக்காளியின் விலையில் மாற்றமில்லாமல் ரூ. 20-லேயே நீடித்து வருகிறது. பொதுவாக விவசாயிகள் சிலா், குறிப்பிட்ட ஒரே காய்கறிகளை சில நேரங்களில் மட்டும் அதிகமாக பயிரிடுவதால் அதன் விலை மிகவும் சரிந்துவிடுகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT