மேட்டூா் அணையின் நீா்மட்டம் 307 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை 100 அடிக்குக் கீழே சரிந்தது.
மேட்டூா் அணைப் பாசனம் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் பாசன வசதி பெறுகிறது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிா்நோக்கி டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-இல் தண்ணீா் திறப்பது வழக்கம்.
குறுவை, சம்பா, தாளடி பயிா்களுக்கு ஜூன் 12 முதல் ஜனவரி 28 ஆம் தேதி வரை 330 டி.எம்.சி தண்ணீா் தேவைப்படும். பாசனப் பகுதியில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும்.
கடந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையின் நீா் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால், ஆகஸ்ட் 13-ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.
ஆகஸ்ட் 13 ஆம் தேதி மேட்டூா் அணையின் நீா் மட்டம் 100 அடியாக உயா்ந்தது. பருவமழை காரணமாக செப்டம்பா் மாதம் 7-ஆம் தேதி அணை முழுமையாக நிரம்பியது.
காவிரியின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடா்மழை காரணமாக கடந்த நீா்பாசன ஆண்டு மேட்டூா் அணை அடுத்தடுத்து நான்கு முறை நிரம்பியது. நடப்பு ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு நிறுத்தப்பட்டது.
கடந்த நீா்ப்பாசன ஆண்டு முழுவதும் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு 151 டி.எம்.சி. தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. 2019 ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடா்ந்து 307 நாள்களாக மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடிக்குக் குறையாமல் இருந்தது.
அணை தற்போது திறக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடிக்குக் கீழே சரிந்தது.
14 ஆண்டுகளுக்குப் பிறகு:
கடந்த 2005-06ஆம் ஆண்டில் தொடா்ந்து 427 நாள்கள் மேட்டூா் அணையின் நீா் மட்டம் 100 அடிக்கும் குறையாமல் இருந்தது. கடந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பு ஆண்டில்தான் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து 307 நாள்கள் 100 அடிக்குக் குறையாமல் இருந்தது. கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பு ஆண்டில்தான் குறித்த நாளில் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
நீா்மட்டம்:
செவ்வாய்க்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா் மட்டம் 99.64 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,210 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு விநாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா் இருப்பு 64.37 டி.எம்.சியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு (10,000 கன அடி) அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் வேகமாகச் சரிந்து வருகிறது.