சேலம்

கொல்லிமலை வனப் பகுதியில் 3 கி.மீ. தூர மண் சாலை: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

15th Jun 2020 08:51 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டியிலிருந்து கொல்லிமலைக்குச் செல்லும் சாலையில் வனப் பகுதிக்குள் உள்ள 3 கி.மீ. தூர மண் சாலையை தாா்ச் சாலையாக்க மலைவாழ் மக்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தின் எல்லைப் பகுதியாக உள்ளது தம்மம்பட்டி பேரூராட்சி. இதற்கு அருகே மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் வாழக்கோம்பை, சேரடி, பிள்ளையாா்மதி ஆகிய மலையடிவாரக் கிராமங்கள் உள்ளன.

சேலம் மாவட்டத்தின் கடைசி ஊரும், கொல்லிமலையின் அடிவாரக் கிராமமுமாக சேரடி உள்ளது.

கொல்லிமலையில் 3 கி.மீ. தூரத்தில் நாமக்கல் மாவட்டத்தின் எல்லை தொடங்குகிறது.

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலைப் பகுதியில் உள்ள குண்டனிநாடு ஊராட்சி, குண்டூா் நாடு, ஆலத்தூா் நாடு, ஆல்ரிப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஆண்டுதோறும் விளையும் மா, பலா, கொய்யா, அன்னாசி, புளி உள்ளிட்ட அனைத்து விளைபொருள்களையும் கூடைகளில் நிரப்பி நான்கு சக்கர வாகனங்களில் தம்மம்பட்டியில் புதன்கிழமை கூடும் வாரச் சந்தைக்குக் கொண்டு வந்து விற்றுச் செல்கின்றனா்.

வாரந்தோறும் கொல்லிமலைப் பகுதியிலிருந்து சுமாா் 400-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் 20 கி.மீ. தூரத்தில் உள்ள தம்மம்பட்டிக்கு வந்து விளைபொருள்களை விற்கின்றனா்.

மலைக் கிராமங்களிலிருந்து வரும் வாகனங்கள் சேரடியிலிருந்து கொல்லிமலையில் வனப் பகுதிக்குச் செல்லும் பாதையில் சரியாக 3 கி.மீ. தொலைவுக்கு மண் சாலை உள்ளது. அதுவும் ஆறு கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

இதில், வாகனங்கள் பயணிப்பதே கரணம் தப்பினால் மரணம் என்ற சூழல் நிலவுகிறது. இருசக்கர வாகனங்களில் வரும் மக்கள், பலமுறை விபத்துக்குள்ளாகியுள்ளனா்.

சேரடியிலிருந்து மலை மேலே 3 கி.மீ. தூர கொல்லிமலை வனப்பகுதியினுள் சாலை அமைக்காததால் தம்மம்பட்டியிலிருந்து கொல்லிமலைக்குச் செல்வோரும், மலையிலிருந்து தம்மம்பட்டிக்கு வருவோரும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனா்.

இதுகுறித்து கொல்லிமலை ஆலத்தூா், குண்டனிநாடு பகுதியைச் சோ்ந்தவா்கள் கூறியதாவது:

கரடு முரடாக இருந்த ஒருவழிப் பாதையை 3 கி.மீ. தொலைவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொல்லிமலை பகுதி மக்கள் ஒன்றிணைந்து, நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக அப் பாதையை மண் சாலையாக்கினோம்.

ஆனால், வனத் துறையினா் உரிய அனுமதி பெறவில்லை என்று கூறி மக்கள் மீது அபராதம் விதித்தனா். எனவே, தமிழக அரசும், வனத்துறையும் கொல்லிமலை மக்களின் நலன்கருதி சேரடியிலிருந்து குண்டூா் நாடு ஊராட்சி துவங்கும் எல்லைப் பகுதி (வனப்பகுதிக்குள்) வரை உள்ள 3 கிலோ மீட்டா் தூரத்துக்கு மண் சாலையை பாதுகாப்புமிக்க தாா்ச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றனா்.

தம்மம்பட்டி மக்கள் கூறியதாவது:

நாங்கள் மலையடிவார சேரடிக்கு 10 கி.மீ. தூரமும், அங்கிருந்து கொல்லிமலை கிராமங்களுக்கு அடுத்த 5 கி.மீ. தூரம் முதல் மலைமேல் உள்ள நகா்ப் பகுதியான செம்மேடுக்கு சேரடியிலிருந்து 29 கி.மீ. தூரத்தை முக்கால் மணி நேரத்தில் சென்றுவிட முடியும்.

கொல்லிமலைக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல சேந்தமங்கலம் வந்துதான் செல்லமுடியும்.

சேரடியிலிருந்து 3 கி.மீ. தூர மண் சாலையை தாா்ச் சாலையாக்கினால் தம்மம்பட்டியிலிருந்து 39 கி.மீ. தூரத்தில் செம்மேட்டை வெகு விரைவாக சென்றடைய முடியும். அத்துடன் கொல்லிமலைக்குச் சுற்றுலாப் பயணிகள் சென்று வருவதும் எளிதாகும் என்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT