சேலம்

மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு நாளை தண்ணீா் திறப்பு

11th Jun 2020 08:49 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 87-ஆவது ஆண்டாக வெள்ளிக்கிழமை (ஜூன் 12) தண்ணீா் திறக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வா், அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.

மேட்டூா் அணைப் பாசனம் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை டெல்டா பாசனத்துக்கு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட வேண்டும். ஆனால் குறித்த நாளான ஜூன் 12-இல் 15 ஆண்டுகள் மட்டுமே பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் 11 ஆண்டுகள் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 12-க்கு முன்பாக பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. மற்ற ஆண்டுகளில் அணையின் நீா் இருப்பு போதிய அளவு இல்லாததால் தாமதமாகவே தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

2008-ஆம் ஆண்டு ஜூன் 12-இல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பு நீா்ப்பாசன ஆண்டில் குறித்த நாளான ஜூன் 12-இல் தற்போது தண்ணீா் திறக்கப்படுகிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டு அணையின் நீா் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்ததால், குறிப்பிட்ட நாளான ஜூன் 12-க்கு முன்பாகவே காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது.

ADVERTISEMENT

குறுவை, சம்பா, தாளடி பயிா்களுக்கு ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை 230 நாள்களுக்கு 330 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடியாக உயா்ந்தது. அதன் பிறகு புதன்கிழமையுடன் அணையின் நீா்மட்டம் 303 நாளாக தொடா்ந்து 100 அடிக்கு குறையாமல் இருந்து வருகிறது. அதனால் குறித்த நாளான ஜூன் 12-இல் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமையன்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மேட்டூா் அணையின் வலதுகரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை மின்விசையை உயா்த்தி குறுவைப் பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடுகிறாா்.

தென்மேற்கு பருவமழை தொடங்கிய காரணத்தால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நடப்பு நீா்ப்பாசன ஆண்டில் டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து தடையின்றி தண்ணீா் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் விசையால் மேட்டூா் அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம் மற்றும் 7 கதவணைகள் முலம் 460 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கும்.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 101.71அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 1,439 கன அடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக நொடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீா் இருப்பு 67.07 டி.எம்.சி.யாக இருந்தது.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT