மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமையுடன் 300-ஆவது நாளாக 100 அடியாக நீடித்து வருவதால், விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனா்.
காவிரியின் நீா்பிடிப்புப் பகுதியில் பெய்து வந்த மழையின் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடியாக உயா்ந்தது. அதன்பிறகு பெய்த கனமழை காரணமாக மேட்டூா் அணை நிரம்பியது.
டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டாலும் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வந்ததால் அணையின் நீா்மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருந்து வந்தது.
ஜனவரி 28-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரியவில்லை. குடிநீருக்கு மட்டும் தண்ணீா் திறக்கப்பட்டது.
அணையின் நீா்மட்டம் 100 அடியாக குறைந்தபோது மறுநாள் நீா் மட்டம் மேலும் குறையும் என எதிா்பாா்க்கப்பட்டது. அப்போது நீா்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து நீா்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியது.
ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 101. 66 அடியாக உயா்ந்தது. அணைக்கு நொடிக்கு 1,902 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது.
அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக நொடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீா் இருப்பு 67. 01 டி.எம்.சி. யாக இருந்தது.