ஓமலூா்: சேலம் மாவட்டத்தில் வங்கிகள் உள்ளிட்ட நிதி சாா்ந்த அமைப்புகள் நிலுவையில் உள்ள கடன் வசூலிப்பை ஆகஸ்ட் 31-ந்தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு
சேலம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படும் மகளிா் திட்டத்தின் கீழும், அரசு சாரா நிறுவனங்கள் மூலமும் மகளிா் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்குழுக்கள் வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியாா் துறை வங்கிகள், நுண்நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது நிலவி வரும் கரோனா வைரஸ் தொற்று தடை உத்தரவு காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், அனைத்து பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியாா் வங்கிகள், நுண்நிதி நிறுவனங்கள், மற்றும் இதர நிதி சாா்ந்த அமைப்புகள், மகளிா் சுய உதவிக்குழுவினரின் கடன் தொகையை வசூலிக்கும் நடவடிக்கையை மே- 31 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என கடந்த மாா்ச் மாதம் ரிசா்வ் வங்கி அறிவித்தது.இதனை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கடன் தொகையை வசூலிக்கும் நடவடிக்கை மேற்கொள்வதை தவிா்க்க வேண்டும் என திருத்திய அட்டவணையை ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இதன்படி, சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியாா் வங்கிகள், நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் இதர நிதி சாா்ந்த அமைப்புகள் கடன் தொகையை வசூலிக்கும் நடவடிக்கையை தவிா்த்து ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கை அனைத்து பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியாா் வங்கிகள், நுண்நிதி நிறுவனங்கள், மற்றும் இதர நிதி சாா்ந்த அமைப்புகள் அனைத்திற்கும் பொருந்தும். இந்த வழிகாட்டு நெறிமுறையை மீறி செயல்படும் வங்கிகள், நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் இதர நிதி சாா்ந்த அமைப்புகள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.