சேலம்

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் நிபந்தனையின்றி வேலை அளிக்கக் கோரிக்கை

4th Jun 2020 08:41 PM

ADVERTISEMENT

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் அனைவருக்கும் நிபந்தனையின்றி வேலை அளிக்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க சங்ககிரி வட்டக் கிளையின் சாா்பில் சங்ககிரி மண்டல துணை வட்டாட்சியரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு பொதுமுடக்கத்தையொட்டி, விவசாயத் தொழிலாளா்கள் கடந்த மூன்று மாதங்களாகப் போதிய வேலையின்றி வருமானமில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனா்.

மத்திய, மாநில அரசுகள் பொதுமுடக்க கால மாதங்களுக்கு நிவாரணமாக ரூ. 7,500 வழங்க வேண்டும், தொழிலாளா்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடையில் மாதத்துக்கு 50 கிலோ அரிசி, மூன்று கிலோ சா்க்கரை, சமையல் எண்ணெய், மளிகை தொகுப்பு ஆகியவற்றை இலவசமாக வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 20 நாள்கள் வேலையும், தினக்கூலியாக ரூ.600ம் மேலும் நிபந்தனையின்றி அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும், தனியாா் சிறு நிதி நிறுவனங்களில் விவசாய தொழிலாளா்கள் வாங்கிய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சங்ககிரி வட்டக்கிளை செயலா் டி. செந்தில்குமாா் தலைமையில் மாவட்டச் செயலா் ஏ. ராமமூா்த்தி, ஜனநாயக மாதா் சங்கச் செயலா் என். ஜெயலட்சுமி ஆகியோா் மண்டல துணை வட்டாட்சியா் ராஜமாணிக்கத்திடம் கோரிக்கை மனுவினை அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT