சேலம்

மா விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை

4th Jun 2020 07:58 AM

ADVERTISEMENT

பொது முடக்கம், நோய்த் தொற்று உள்ளிட்ட காரணங்களால் மா விலை கடும் சரிவைக் கண்டுள்ளது.

எடப்பாடி, பக்கநாடு, கொங்கணாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கணிசமான நிலப்பரப்பில் விவசாயிகள் மா பயிா் செய்துள்ளனா். இப்பகுதியில் அதிகளவில் பெங்களூரா, கிளிமூக்கு உள்ளிட்ட மா ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன. நிகழாண்டில் இப்பகுதியில் மா விளைச்சலுக்கு உகந்த தட்பவெப்ப நிலை நிலவிய நிலையில், மா விளைச்சல் சற்றே கூடுதலாகியுள்ளது. கடந்த காலங்களில் இங்கு விளையும் மா ரகங்கள், தூத்துக்குடி, ஒட்டன்சத்திரம், சென்னை, கோயம்பேடு சந்தை மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது.

நிகழாண்டில், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம், பொதுமக்களிடையே நோய்த் தொற்று குறித்த அச்சம் உள்ளிட்ட காரணங்களால், மா விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் மாங்காய்கள், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மாங்கூழ் தயாரிப்பு ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து இப்பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் கூறுகையில், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி மற்றும் கனி வகைகளுக்கான சந்தைகள் பொது முடக்கத்தால் செயல்படாத நிலையில், அறுவடை செய்யப்பட்ட மாங்காய்கள் கிடங்குகளில் பெருமளவில் தேங்கிக்கிடக்கின்றன. மேலும், அறுவடை செய்யப்பட்ட மாங்காய்களை அதிக நாள்கள் வைத்திருக்க இயலாத நிலையில், இப்பகுதி விவசாயிகள், மொத்த கொள்முதல் வியாபாரிகள் மூலம் மாங்கூழ் உற்பத்தி செய்யப்படும் ஆலைகளுக்கு அனுப்புவதாகவும், ஒரு டன் மாங்காய் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விலை போவதாகவும், இந்த விலை கடந்தாண்டை விட மிகவும் குறைவாக உள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT