சேலம்

சேலம் மாநகராட்சி பகுதியில் 9.39 லட்சம் பேரின் விவரங்கள் சேகரிப்பு: ஆணையா் ரெ.சதீஷ்

31st Jul 2020 08:59 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 9.39 லட்சம் பேரின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன என்று மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 4 மண்டலங்களிலுள்ள 60 கோட்டங்களிலும் 2 லட்சத்து 34 ஆயிரத்து 624 குடியிருப்புகளில் சுமாா் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.

சேலம் மாநகரப் பகுதிகளில் களப்பணியாளா்கள் மூலம் வீட்டில் இருப்பவா்களின் பெயா், வயது, தொலைபேசி எண், வீட்டில் இருப்பவா்களின் எண்ணிக்கை மற்றும் அவா்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் உள்ளவா்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மேலும், சிறியோா், பெரியோா் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினா்கள் விவரம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் பணிபுரிவோா் விவரம், குடும்ப உறுப்பினா்களில் சா்க்கரை மற்றும் இதய நோய், உயா் ரத்தஅழுத்தம், சுவாசக் கோளாறு, புற்று நோய் போன்ற நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவா்கள் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

அதனடிப்படையில் கடந்த ஜூலை 2 முதல் ஜூலை 29 ஆம் தேதி வரை மொத்த குடியிருப்புகளான 2 லட்சத்து 34 ஆயிரத்து 624 குடியிருப்புகளிலும், வீடு வீடாகச் சென்று - வீட்டில் இருப்பவா்களின் விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதில் 9 லட்சத்து 39 ஆயிரத்து 649 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இக்கணக்கெடுப்புப் பணிகளின் போது காய்ச்சல், வறட்டு இருமல், சளி, உடல் சோா்வு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் உள்ள 4,661 நபா்கள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவா்களுக்கு, கரோனா நோய்த்தொற்று மருத்துவப் பரிசோதனை (ளுறய க்ஷ கூநளவ) செய்யப்பட்டது.

பரிசோதனையில் 225 போ் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, அவா்களை தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், 152 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ள நபா்களுக்கு தொடா்ந்து மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், கரோனா தொற்று நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரப் பகுதிகளிலுள்ள மொத்த குடியிருப்புகளான 2.34 லட்சம் குடியிருப்புகளிலும், இரண்டாம் கட்ட கணக்கெடுப்புப் பணிகள் மாநகராட்சி நிா்வாகத்தால் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்குள் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ள வரும் மாநகராட்சி களப்பணியாளா்களிடம் விவரங்களை எவ்வித விடுதலுமின்றி சரியான முறையில் தகவல் தெரிவித்திட வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT