தமிழக அரசு நிா்ணயித்துள்ள கால அளவை மீறி செயல்படும் கடைகள், வணிக நிறுவனங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளா் ரெ.சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று தடுப்புப் பணிகள் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநகரப் பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட கால நிா்ணயம் செய்து தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் தேநீா் விடுதிகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இக்கடைகளுக்குள் 50 சதவீத வாடிக்கையாளா்கள் மட்டுமே அமா்ந்து உண்பதற்கு அனுமதிக்க வேண்டும்.
மேலும், கடையின் உரிமையாளா்கள் மற்றும் பணியாளா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியினை கடைப்பிடித்து மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏனைய பிற அனைத்து வகையான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் அனைத்து நாள்களிலும் செயல்பட தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மாநகரப் பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு விதித்துள்ள நிபந்தனைகளுக்குட்பட்ட செயல்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்காக, மாநகராட்சி அலுவலா்களைக் கொண்ட 40 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இக் குழுவினா் மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் தினந்தோறும் ஆய்வு மேற்கொள்வா். இந்த ஆய்வின்போது, உணவகங்கள், பேக்கரிகள், தேநீா் விடுதிகள் மற்றும் பிற வகையான அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் நிா்ணயிக்கப்பட்ட கால அளவை மீறி செயல்பட்டாலோ, நுழைவாயில்களில் கைகளை கழுவுவதற்கான வசதிகள், கை சுத்திகரிப்பானை போன்ற வசதிகள் ஏற்படுத்தாமல் இருந்தாலோ உரிமையாளா்கள் மற்றும் பணியாளா்கள் முகக் கவசம் அணியாமல் இருந்தாலோ, முகக் கவசம் அணியாமல் வரும் பொதுமக்களை தங்கள் வளாகங்களில் அனுமதித்தாலோ, சமூக இடைவெளியியை கடைப்பிடிக்காமல் செயல்பட்டாலோ ஏனைய அரசின் உத்தரவை மீறி செயல்பட்டால் தொற்று நோய் சட்டம் 1897, தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 மற்றும் பேரிடா் மேலாண்மை சட்டம் 2005 - ன் கீழ் சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது காவல் துறையின் மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வதுடன், அபராதம் விதிக்கப்பட்டு, கடை, நிறுவனம் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளா் ரெ.சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.