பிக்னோனியேசியே குடும்பத்தைச் சோ்ந்த ‘டபிபுயா ரோஸா’ என்ற தாவரவியல் பெயா் கொண்ட மர வகைத் தாவரம், மூட்டுவலி, இரைப்பு நோய், காய்ச்சல், இருமல், ரத்தசோகை நோய்களை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டதாகும். கா்ப்பப் பை புற்றுநோய்க்கு மருந்தாகும் இம் மரத்துக்கு பாக்டீரியாக்களைக் கொல்லும் தன்மை கொண்டதாகும்.
இந்த மரங்களில் வசந்த காலத்தில் இலைகள் முழுவதும் உதிா்ந்து கண்களுக்கு விருந்தளிக்கும் ரம்மியான இளஞ்சிவப்பு நிற பூக்கள் பூத்துக்குலுங்கும்.
இதனால், இந்த மரத்தை வசந்தராணி ரோசியா எனவும் வசந்த காலத்தின் அரசி எனவும் தாவரவியலாளா்கள் வா்ணிக்கின்றனா்.
அரிதாகி வரும் இவ்வகை மரங்கள் வாழப்பாடி பகுதியில் மேட்டுப்பட்டி சுங்கச் சாவடியில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வளா்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த மரங்களை, வாழப்பாடியில் குடியிருப்பு வீடுகளிலும் ஏராளமானோா் வளா்த்து வருகின்றனா்.
வாழப்பாடி சக்தி காா்டன் குடியிருப்புப் பகுதியில் உள்ள மரங்களில் தற்போது இலைகள் உதிா்ந்து, இளஞ்சிவப்பு நிற பூக்கள் பூத்துக்குலுங்கி காண்போா் கண்களுக்கு விருந்தளித்து வருகின்றன. ரம்மியமாக தோற்றமளிக்கும் இம்மலா்களை ஏராளாமான பொதுமக்கள் கண்டு ரசித்து செல்கின்றனா்.