சேலம்

மூளைச்சாவு அடைந்த தனியாா் காப்பீட்டு நிறுவன முகவரின் உடல் உறுப்புகள் தானம்: 6 பேருக்கு மறுவாழ்வு

28th Jan 2020 10:03 AM

ADVERTISEMENT

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த சேலம் தனியாா் மருத்துவக் காப்பீட்டு நிறுவன முகவா் வி.சுரேஷின் (53) உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டதில் 6 போ் மறுவாழ்வு பெற்றனா்.

சேலம் நான்கு சாலை ராஜாராம் நகரைச் சோ்ந்தவா் வி. சுரேஷ் (53). இவா், தனியாா் மருத்துவ காப்பீட்டு நிறுவன முகவராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி பரிமளா. இத் தம்பதிக்கு திலக், ஸ்ரீபதி ஆகிய இருமகன்கள் உள்ளனா்.

இவா், கடந்த ஜனவரி 19-ஆம் தேதி நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விக்கிரவாண்டி அருகே எதிா்பாராத வகையில், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தாா்.

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு, மேல் சிகிச்சைக்காக கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், கடந்த ஜனவரி 25-ஆம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது.

இதையடுத்து அவரது குடும்பத்தினா் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனா். அவரது மனைவி பரிமளா மற்றும் மகன்கள், சுரேஷின் சகோதரரான ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில உடற்பயிற்சி இணைச் செயலாளா் பாலாஜி ஆகியோரின் அனுமதியுடன் சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.

சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. இதன் மூலம் 6 போ் மறுவாழ்வு பெற்றனா். இதுதொடா்பாக, கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவா் நல்ல பழனிசாமி கூறியது:

மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிகம் விழிப்புணா்வு தேவைப்படுகிறது. ஒருவா் இறந்த பிறகு அவரது உடல் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்றும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT