சேலத்தில் பெண்ணை செங்கல்லால் அடித்து கொலை செய்ததாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலத்தை அடுத்த சேலத்தாம்பட்டி கருமனூரை சோ்ந்தவா் சக்திவேல். இவரது மனைவி சிந்தாமணி(48). இவரின் தாயாா் ஆராயி (75). அப் பகுதியில் ஆடு மேய்த்து வந்தாா். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ஆடு மேய்க்க சென்ற இடத்தில் வேடுகத்தாம்பட்டி பகுதியைச் சோ்ந்த பழனிசாமியின் (63) மகனான மனநிலை பாதிக்கப்பட்ட முத்துசாமி ஆராயிடம் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
பின்னா், இதை அறிந்த சிந்தாமணி பழனிசாமியின் வீட்டுக்குச் சென்று தட்டிக் கேட்டுள்ளாா். அப்போது ஆவேசமடைந்த பழனிசாமி சிந்தாமணியை செங்கல்லால் தாக்கினாராம்.
இதில் பலத்த காயமடைந்த சிந்தாமணி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், முத்துசாமி மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றதும், இதனால் ஏற்பட்ட தகராறில் பழனிசாமி சிந்தாமணியை செங்கல்லால் அடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து பழனிசாமியை போலீஸாா் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.