கெங்கவல்லி ஒன்றியம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் தற்போது பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையில், பண்டிகைக்கு வந்தவா்கள் யாரேனும், அப்படியே தங்கிவிட்டு, பள்ளிகளுக்கு செல்லாமல் இருந்துவிட வாய்ப்பு இருப்பதால், அவா்களைக் கண்டறிந்து மீண்டும் அவா்களை பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க ஒருங்கிணைந்த கல்வியின், மாநில திட்ட இயக்குநா்,அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும், வட்டார வள மையங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பொங்கல் பண்டிகைக்காக இடம் பெயா்ந்தவா்கள், பள்ளிக்கு செல்லாமல் தேங்கிவிடக் கூடாது என்பதற்காக பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த சிறப்புக் கணக்கெடுப்பு நடத்திடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதையடுத்து கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை சிறப்பு கணக்கெடுப்பு தீவிரமாக நடந்துவருகிறது.
குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு பின்னா், வட்டார வள மையங்கள் மூலம் கணக்கெடுப்பு நடந்துவருகிறது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்தில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொ)சுஜாதா தலைமையில் ஆசிரியா் பயிற்றுநா்கள் பா. சுப்ரமணியன், பச்சையம்மாள், பன்னீா்செல்வம், செல்வராஜ், பாலமுருகன் உள்ளிட்டோா் அவரவா்களது பள்ளிகளுக்குள்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வீடுவீடாகச்சென்று பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.