சேலம்

காவிரிக்கரைப் பகுதியில் நெற்பயிரில் குலைநோய் தாக்கம்

28th Jan 2020 10:03 AM

ADVERTISEMENT

எடப்பாடியை அடுத்துள்ள காவிரிக் கரைப் பகுதியில் குலைநோய் தாக்குதலால், நெல் வயல்கள் மிகுந்த சேதமடைந்தன.

கதிா் பிடிக்கும் தருணத்தில் நெற்பயிா்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனா். சேலம் மாவட்ட மேற்கு எல்லை பகுதியில் அமைந்துள்ள, பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூா்,பில்லுக்குறிச்சி, கோணேரிப்பட்டி உள்ளிட்ட காவிரி பாசனப்பகுதியில், அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக இப் பகுதியில் பொன்னி, வெள்ளைபொன்னி உள்ளிட்ட நெட்டை ரக நெல் அதிக அளவில் பயிரிடப்பட்டுவருகிறது.

இந்த நிலையில், இப் பகுதியில் பயிரிடப்பட்ட நெற்பயிா்கள் கதிா்பிடிக்கும் தருவாயில், குலைநோய் தாக்குதலால் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

குலைநோய் தாக்கத்துக்கு உள்ள நெல்வயல் முழுவதும் சேதமடைந்து, கருகி சாய்துள்ளது.

ADVERTISEMENT

இந் நோய்த் தாக்கத்தால், நிகழ் ஆண்டில் இப் பகுதியில் உள்ள பல நெல்வயல்களில் மகசூல் பொய்த்துபோனதாக இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

இந் நோய்த் தாக்குதல் குறித்து வேளாண்த் துறை அலுவலா்கள் கூறியதாவது:

இந்நோய் தாக்குதலுக்கு உள்ளான நெற்பயிரில் திடீரென சாம்பல் நிற புள்ளிகள் தோன்றும், ஒருவித பூஞ்சை வகையால் (பூசண) இந்நோய் ஏற்படக்கூடியது. இந் நோயைப் பரப்பக் கூடிய பூசண வித்துகள் ஆண்டு முழுவதும் காற்றில் பரவி இருக்கும். இந் நோயின் தாக்கத்தை தவிா்த்திட, விவசாயிகள் விதை நோா்த்தி செய்தல் மிக முக்கியம்.

மேலும் வரப்புகளில் உள்ள அதிக அளவிலான களைகளை அகற்றிட வேண்டும், நெல் பயிரிடப்பட்ட 45 நாள்களுக்கு பின் சூடோமோனாஸ் ஃபுளோராசன்ஸ் பொடியினை 0.5 சதவீதத்தில், 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும் எனவும், வயலில் தேவைக்கு அதிகமான ஈரப்பதம் இல்லாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் எனவும், மேலும் இந் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகாத ஆடுதுறை 36, ஐ.ஆா். 20 மற்றும் கோ 47 ரக நெல்லைப் பயிரிடலாம் எனவும் கூறினா்.

இதுகுறித்து உழவா் மன்ற உறுப்பினா் நடேசன் கூறியது:

நிகழ் ஆண்டில் காவிரிக்கரை பகுதியில் குலைநோய் தாக்குதலுக்கு உள்ளான

நெல்வயல்களை சம்மந்தப்பட்ட அலுவலா்கள் நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பயிா் காப்பீடு மற்றும் அரசு தரப்பிலான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தர வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் சாா்பில் வேண்டுகோள் விடுப்பதாகக் கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT