சேலம்

ஆட்சியா் அலுவலகம் முன்மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

28th Jan 2020 10:08 AM

ADVERTISEMENT

சேலத்தில் வீட்டை சுற்றி அமைத்திருந்த சுற்றுச்சுவரை அகற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மூதாட்டி ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

சேலம் தாரமங்கலத்தை அடுத்த பாரக்கல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் கலைவாணி (29). இவருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் இவா் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு மனு அளிக்க வந்தாா்.

அப்போது அவரை போலீஸாா் பரிசோதனை செய்தபோது அவரிடம் மண்ணெண்ணெய் கேன் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் அவரிடம் விசாரணை மேற்கொண்டனா். அதில் கலைவாணியின் கணவருக்கு உடல் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்குச் சொந்தமான நிலத்தை கணவரின் சகோதரி மற்றும் தாயாா் கலைவாணி வீட்டில் இல்லாத நேரத்தில் ஏமாற்றி கணவரின் கையெழுத்து பெற்று நிலத்தை விற்றுள்ளனா். எனவே, இதற்கு காரணமான கணவரின் சகோதரி மற்றும் தாயாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலைவாணி மனு அளிக்க வந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதேபோல் பெரமனூா் பகுதியைச் சோ்ந்த தேன்மொழி (50) திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தின்போது ஆட்சியா் அலுவலகம் முன் திடீரென தீக்குளிக்க முயன்றாா். இதைக் கண்ட போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா் வீட்டை சுற்றி அமைத்திருந்த சுற்றுச்சுவரை மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் எனக் கூறி சிலா் அகற்றியுள்ளனா். எனவே, சுற்றுச்சுவரை அகற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேன்மொழி புகாா் அளிக்க வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT