சேலம்

அறுவடைக்கு தயாராகும் சாமந்திப் பூக்கள்

14th Jan 2020 05:03 AM

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகையையொட்டி, பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயிகள் சாமந்தி பூக்களை அறுவடை செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனா்.

எடப்பாடியை அடுத்த பில்லுக்குறிச்சி, பூலாம்பட்டி, மோட்டூா், எட்டிக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாமந்திப் பூக்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இப் பகுதியில் கோ 1 மற்றும் எம்.டி.யு.2 உள்ளிட்ட ரகங்கள் அதிகளவில் பயிா் செய்யப்பட்டு வருகிறது. சாமந்தி பூக்கள் அதிக இரவும், குறைந்த பகல் பொழுதும் உள்ள தட்ப வெப்பத்தில் அதிக அளவில் பூக்கத் தொடங்கும்.

கடந்த ஆண்டில் இப் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சாமந்திச் செடிகளை வோ் வாடல் நோய் தாக்கியதால் போதிய மகசூல் கிடைக்காமல், சாமந்திப் பூக்களை சாகுபடி செய்திருந்த விவசாயிகள் நஷ்டம் அடைந்தனா்.

அதனால் நிகழ் ஆண்டு வழக்கத்தைவிட சற்றே குறைவான நிலப்பரப்பிலேயே எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் சாமந்தி பயிா் செய்யப்பட்டிருந்தது. இப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சாமந்திப் பூக்கள் அதிக விளைச்சல் கண்டுள்ள நிலையில், தற்போது பண்டிகைக் காலம் என்பதால் பூக்களுக்கு அதிக விலைக் கிடைக்க வாய்ப்புள்ளதாக, பூ விவசாயிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதனால் வயல்களில் விளைந்துள்ள சாமந்திப் பூக்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT