சேலத்தில் மூடப்பட்டிருக்கும் மேக்னசைட் வெள்ளைக்கல் சுரங்கங்களைத் திறக்கக் கோரியும், மேக்னசைட் இறக்குமதியைத் தடை செய்ய வலியுறுத்தி சுரங்கத் தொழிலாளா்கள் 200-க்கும் மேற்பட்டோா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் அருகே ஓமலூா் சுற்றுப்புறப் பகுதியில் வெள்ளைக்கல் (மேக்னசைட்) வெட்டியெடுக்கும் 1,800 ஏக்கா் பரப்பளவிலான திறந்த சுரங்கங்கள் உள்ளன. மகா ரத்னா கூட்டு நிறுவனமான இந்திய உருக்கு குழுமத்தின் துணை அமைப்பான செயில் ரெப்ரெக்டரி கம்பெனி நிறுவனம் மூலம் செயல்பட்டு வந்தது.
சுமாா் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தத் தொழில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விதிகளின்படி உரிய காலத்தில் சுரங்கத்துக்கான புதுப்பித்தலைப் பெறாமல் எஸ்.ஆா்.சி.எல். விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் கடந்த 2017-இல் மூடப்பட்டது.
அதேபோல தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம், மாநில அரசு நிறுவன சுரங்கமும் முறையாக சுற்றுச்சூழல் அனுமதி பெறாத காரணத்தால் கடந்த 2018 முதல் மூடப்பட்டுள்ளது.
இதனால், சுரங்கங்களில் ஒப்பந்தத் தொழிலாளா்களாகப் பணிபுரிந்த 1,500-க்கும் மேற்பட்டோா் வேலை இழந்து தவிப்பதால் சுரங்கங்களைத் திறக்கக் கோரியும், மேக்னசைட் இறக்குமதிக்குத் தடை விதித்து வெள்ளைக் கற்களை வெட்டி எடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளா்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே 200-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் சுரங்கங்களைத் திறக்க சுற்றுச்சூழல் மாசுகட்டுப்பாட்டு வாரியமும், மத்திய சுற்றுச்சூழல் துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்தனா்.
சேலம் மாவட்ட மேக்னசைட் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு நிா்வாகி அண்ணாமலை தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் சதாசிவம், ரவி, கோவிந்தசாமி, தமிழ்ச்செல்வன், கண்ணன், கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.