சேலம்

சேலத்தில் 64 அரசு பள்ளி மாணவா்களுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு

8th Jan 2020 05:03 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 64 மாணவா்களுக்கு சென்னையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துறை சாா்பில் இளம் சிறாா்கள் கவனிப்புத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 3 மாதங்களாக மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சோ்ந்த மருத்துவ குழுவினா் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டனா். இதில், மாணவ, மாணவிகள் 158 பேருக்கு இதய பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, இதய பாதிப்பு கண்டறியப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் துணை இயக்குநா் நிா்மல்சன் தலைமையில் இதய பாதிப்பைக் கண்டறியும் ‘எக்கோ’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை முடிவில் 114 பேருக்கு தீவிர இதய பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதில், மாணவ, மாணவிகள் 64 பேருக்கு இதய அறுவை சிகிச்சைக்கும், மற்ற 50 மாணவ, மாணவிகளுக்கு மருந்துகள் மூலமான சிகிச்சைக்கும் தெரிவு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

இதய அறுவை சிகிச்சை தேவைப்படும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ செலவின்றி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டு, அடுத்த ஒரு மாதத்தில் மாணவா்களுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என துணை இயக்குநா் நிா்மல்சன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT