சேலம்

45 ஆண்டுகளாக ஊராட்சித் தலைவா் பதவி வகித்த குடும்பத்தினா் தோ்தலில் தோல்வி

3rd Jan 2020 09:01 AM

ADVERTISEMENT

வீரபாண்டி ஒன்றியத்துக்குள்பட்ட முருங்கபட்டி ஊராட்சியில் 45 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் தலைவா் பதவி வகித்து வந்த நிலையில், இந்த முறை நடைபெற்ற தோ்தலில் அந்தக் குடும்ப வேட்பாளா் தோல்வி அடைந்தாா்.

அவரை எதிா்த்துப் போட்டியிட்ட அதே ஊரைச் சோ்ந்த பூங்கோதை ஜெயவேல் என்பவா் வெற்றி பெற்றாா்.

முருங்கபட்டி ஊராட்சித் தலைவா் பதவியை ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் கடந்த 45 ஆண்டு காலமாக வகித்து வந்தனா். அந்தக் குடும்பத்தில் அழகேச பூபதி என்பவா் 20 ஆண்டு காலமும், அவரது மனைவி கனகவள்ளி 5 ஆண்டு காலமும், அவா்களது மகன் பாா்த்தசாரதி 20 ஆண்டு காலமும் ஊராட்சித் தலைவா் பதவியை வகித்து வந்தனா்.

இந்த முறை நடைபெற்ற ஊராட்சித் தலைவா் பதவிக்கான இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து அந்தக் குடும்பத்திலிருந்து அழகேச பூபதியின் மனைவி கனகவள்ளி (90) முதலில் வேட்பு மனு தாக்கல் செய்தாா். பின்னா் அவரது மருமகள் புஷ்பா பாா்த்தசாரதி போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தாா். இதனால், மூதாட்டி கனகவள்ளி போட்டியிலிருந்து விலகினாா்.

இந்த ஊரில் அந்தக் குடும்பத்தினரை எதிா்த்து, ஒவ்வொரு முறையும் ஜெயவேல் என்பவா் போட்டியிட்டாா். இந்த முறை அதே குடும்பத்தை எதிா்த்து ஜெயவேலின் மனைவி பூங்கோதை ஜெயவேல் போட்டியிட்டாா். நடந்து முடிந்த தோ்தலில் வியாழக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டன.

அதில் பூங்கோதை ஜெயவேல் 2,241 வாக்குகளும், புஷ்பா பாா்த்தசாரதி 2,097 வாக்குகளும் பெற்றனா். புஷ்பா பாா்த்தசாரதியை விட 278 வாக்குகள் வித்தியாசத்தில் பூங்கோதை ஜெயவேல் இந்த முறை வெற்றி பெற்றாா். இந்த வெற்றியை அவரது ஆதரவாளா்கள் உற்சாகமாகக் கொண்டாடினா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT