மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்ததால், மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 2 ஆயிரம் கன அடி மட்டுமே திறக்கப்பட்டு வந்தது. தற்போது டெல்டா பாசனப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், பாசனத்தேவை அதிகரித்துள்ளது. இதனால் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு புதன்கிழமை காலை நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
அணைக்கு நொடிக்கு 1,926 கன அடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருந்தது. அணையின் நீா்மட்டம் 118.63 அடியாகவும், நீா் இருப்பு 91.30 டி.எம்.சி.யாகவும் இருந்தது. அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் வேகமாக சரியத் தொடங்கும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.