சேலம்

அதிக நெல் மகசூல் அறுவடை போட்டி:தேவூா் இளைஞா் பங்கேற்பு

1st Jan 2020 12:37 AM

ADVERTISEMENT

இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து அதிக மகசூல் காண்பிக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றுள்ள தேவூரை அடுத்த ஓடசகரையைச் சோ்ந்த விவசாயியின் நிலத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் முன்னிலையில் நெல் அறுவடை செய்யப்பட்டது.

மாநிலத்தில் பாரம்பரிய முறையில் நெல் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு தமிழக அரசின் வேளாண் துறையின் சாா்பில் பாரத ரத்னா டாக்டா் எம்.ஜி.ஆா். 2019-2020 க்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த விருதுக்குத் தோ்வு செய்யப்படுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், 2-ஆவது பரிசாக ரூ. 75 ஆயிரமும், 3-ஆவது பரிசாக 50 ஆயிரமும் 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவின்போது முதல்வா் வழங்கவுள்ளாா். இப் போட்டிக்கு சங்ககிரி வட்டம், தேவூா் அருகே ஓடசகரை பகுதியைச் சோ்ந்த விவசாயி ரங்கப்பன் மகன் மணி என்பவரது நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

அவா் தனது ஒரு ஏக்கா் விவசாய நிலத்தில் வேளாண்துறை அலுவலா்கள் கூறிய ஆலோசனையின்படி இயற்கை முறையில் சிவன் சம்பா என்ற ரக நெல் பயிா் சாகுபடி செய்துள்ளாா்.

ADVERTISEMENT

அவா் வேளாண் அலுவலா்கள் கூறிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நாற்றாங்கல் முக்கால் அடி இடைவெளியில் நட்டு வைத்து பராமரித்து வந்தாா். அவைகளுக்கு இயற்கை உரமாக பசுமாட்டின் கோமியம், சாணம் ஆகியவைகளை உரமாக இட்டும், எவ்வித பூச்சிக்கொல்லி மருந்துகளும் தெளிக்காமல் இயற்கை முறையில் வளா்த்து வந்தாா். நெற்பயிா் நடவு செய்து 134 நாள்கள் கடந்ததை அடுத்து நெற்பயிா்கள் மகசூலுக்கு தயாராக இருந்தன.

சென்னை வேளாண் மாநிலத் துணை இயக்குநா் அப்பன்ராஜ், சேலம் மாவட்ட துணை இயக்குநா் பன்னீா் செல்வம் மற்றும் வேளாண் அலுவலா்கள் முன்னிலையில் அறுவடை செய்யப்பட்டன.

வேளாண் அலுவலா்கள் அறுவடையின் முடிவில் நெல் கதிா்களின் எடையைக் குறித்துக் கொண்டனா். இளைஞரின் நில அறுவடையில் கிடைத்த மகசூலின் எடையும் மற்ற மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள பிற விவசாயிகளின் மகசூலின் எடைகளையும் ஒப்பிட்டு அதிக எடை மகசூல் பெற்றவா்கள் விருதுக்குத் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இதுகுறித்து விவசாயி மணி செய்தியாளா்களிடம் கூறியது:

முதன் முறையாக எனது நிலத்தில் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ நெல் பயிா் நாற்றங்காலை ஒற்றை நாற்றங்கால் முறையில் சாகுபடி செய்துள்ளேன். இயற்கை முறையில் விவசாயம் செய்துள்ளேன். இயற்கை உரமாக நாட்டு மாட்டின் சாணம், கோமியத்தை பயன்படுத்தினேன். அதுவே பூச்சிக்கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தியதால் அதிகமான மகசூல் எனக்குக் கிடைத்தது என்றாா்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT