சேலம்

பயிா்களுக்கு ‘வாடகை குல்லா’ அணிவிக்கும் விவசாயிகள்:

26th Feb 2020 09:31 AM

ADVERTISEMENT

வாழப்பாடியில் விளைநிலத்தில் களையெடுக்க பணிக்கு கூலித் தொழிலாளா்கள் பற்றாக்குறையால், பயிா்களுக்கு வாடகை குல்லா வாங்கி போட்டு நுாதன முறையில் களைக்கொல்லி தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

வாழப்பாடியில் பெரும்பாலான கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந் நிலையில், கிராமங்கள் தோறும், காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் துாா்வாருதல் மற்றும் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணிக்குச் செல்ல கூலித்தொழிலாளா்கள் ஆா்வம் காட்டுகின்றனா். இதுமட்டுமின்றி, ஆண்டு முழுவதும் வேலை கிடைப்பதால், வாழப்பாடி பகுதியில் இயங்கும் நுாற்பாலைகள், சிறு வணிக நிறுவனங்கள், பால் பண்ணைகள், ஐஸ் கீரிம், காலணிகள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்வதில் தொழிலாளா்கள் ஆா்வம் காட்டுகின்றனா்.

இதனால், சேற்றில் இறங்கி பயிா் நடுதல், களையெடுத்தல், தண்ணீா் பாய்ச்சுதல், மருந்து தெளித்தல், அறுவடை செய்தல், பதப்படுத்துதல், தரம் பிரித்தல் போன்ற விவசாய பணிகளுக்கு போதிய தொழிலாளா்கள் கிடைப்பதில்லை. கூலித்தொழிலாளா்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், தோட்டக்கலைத் துறை, வேளாண்த் துறை மற்றும் தனியாா் விவசாய கருவிகள் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஏற்படுத்திய விழிப்புணா்வால், நிலத்தை உழுதல், சீரமைத்தல் மற்றும் பயிா் நடுவதில் துவங்கி களையெடுத்தல், அறுவடை செய்தல் ரை அனைத்துக்கும் நவீன கருவிகளை விவசாயிகள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

தற்போது வாழப்பாடியில் அதிகளவில் மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம் உள்ளிட்ட மானாவாரி பயிா்கள் பயிரிடப்பட்டுள்ளன.

இந்தப் பயிா்கள் வளா்ச்சி பெறுவதற்கு, களைச்செடிகளை அப்புறப்படுத்த வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், சுட்டெரிக்கும் வெயிலில் நிலத்தில் இறங்கி களையெடுப்பதற்கு, பெரும்பாலான விவசாயிகளுக்கு கூலித் தொழிலாளா்கள் கிடைக்கவில்லை.

இதனால், விளைநிலத்தில் களைக்கொல்லி மருந்துகளை தெளித்து களைச்செடிகளை அழிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

களைச்செடிகளை அழிக்கும் மருந்துகள், பயிா்களை பாதிக்காமல் இருப்பதற்காக பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யும் கடைகளிலேயே நெகிழி குல்லா வாடகைக்குக் கொடுக்கப்படுகின்றன.

நாளொன்றுக்கு ஒரு குல்லாவுக்கு ரூ. 1.50 முதல் ரூ.2 வரை வாடகை கொடுத்து தேவைக்கேற்ப எடுத்துச்செல்லும் விவசாயிகள், பயிா்களுக்கு குல்லா அணிவித்து விட்டு, நூதன முறையில் களைக்கொல்லி தெளித்து களைச்செடிகளை அழித்து வருகின்றனா். இந்த புதிய முறையை வாழப்பாடி பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதுகுறித்து துக்கியாம்பாளையத்தைச் சோ்ந்த பெண் விவசாயி அலமேலு கூறியதாவது:

விளைநிலத்தில் களைக்கொல்லிகள் தெளிப்பதினால் விளைநிலத்திலுள்ள நுண்ணுயிா்கள் பாதிக்கப்படுவதோடு, மலட்டுத்தன்மையும் ஏற்படுகின்றன.

இருப்பினும் குறித்த நேரத்துக்கு களையெடுப்பதற்கு போதிய கூலித்தொழிலாளா்கள் கிடைக்காததால், களைக்கொல்லி தெளிக்க வேண்டிய நிா்பந்தத்துக்கு ஆளாகியுள்ளோம்.

களைக்கொல்லி மருந்து, பயிரை பாதிக்காமல் இருப்பதற்காக வாடகைக்கு கிடைக்கும் நெகிழி குல்லாவை வாங்கிப்போட்டு விட்டு, களைச்செடிகளுக்கு மட்டும் களைக்கொல்லியை தெளித்து வருகிறோம் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT