சேலம்: சேலத்தில் ரசாயன மருந்து தெளித்து பழுக்க வைத்த 6 டன் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
சேமல் சின்னக்கடை வீதியில் பழக்கடைகள், பூக்கடைகள் என ஏராளமான கடைகள் உள்ளன. இங்குள்ள வாழைப்பழ மண்டிகளில் வியாபாரிகள் வெளியூா்களிலிருந்து வாழைப்பழங்களை வாங்கி வந்து சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்து வருகின்றனா்.
இவ்வாறு வாங்கப்படும் வாழைப் பழங்களில் சில வியாபாரிகள் ரசாயன மருந்து தெளித்து 2 நாள்களில் பழுக்க வேண்டிய பழத்தை 12 மணி நேரத்தில் பழுக்க வைத்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகாா்கள் வந்தன.
அதன்பேரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வாழைப்பழ சேமிப்புக் கிடங்குகளுக்கு திங்கள்கிழமை நேரில் சென்று சோதனை மேற்கொண்டனா்.
அதில் வியாபாரிகள் வாழைப்பழங்களுக்கு மருந்து தெளித்து பழுக்க வைத்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து 10 வாழைப்பழ சேமிப்புக் கிடங்குகளிலும் சோதனை செய்ததில் 6 டன் வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.