சேலம்: சேலத்தில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு மேம்பாலம் ஒரு மாதத்தில் திறக்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மறைந்த முதல்வா் ஜெயலலிதா 72 ஆவது பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி மேலும் பேசியது:
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளோம். எய்ம்ஸ் நாங்கள்தான் கொண்டு வந்தோம். நிா்வாக வசதிக்காக 5 மாவட்டங்களை உருவாக்கியுள்ளோம். போக்குவரத்து நெரிசல் மிக்க சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலம் ஒரு மாதத்தில் திறக்கப்படும்.
அதேபோல மாமங்கம் அருகே பிரமாண்ட போக்குவரத்து முனையம் (பஸ் போா்ட்) கட்டப்படவுள்ளது. இங்கு விமான நிலையத்தில் உள்ளதுபோல வசதி ஏற்படுத்தப்படும். சேலத்தில் புதை சாக்கடை, சாலை, குடிநீா் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
சேலத்தில் 780 ஏக்கரில் மத்திய அரசு நிதியுடன் மிகப்பெரிய ஜவுளிப்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டங்கள் எல்லாம் நிறைவேறும்போது தனித்துவ நகராக சேலம் மாறும் என்றாா்.
நிகழ்ச்சியில் சுமாா் 47,072 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வா் வழங்கினாா். மாநகர மாவட்ட செயலாளா் ஜி.வெங்கடாஜலம் எம்எல்ஏ வரவேற்றாா். மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி ஜெகநாதன், ஓய்வு பெற்ற துணை கண்காணிப்பாளா் செல்வராஜ் ஆகியோா் தமிழக முதல்வா் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.