புத்திரகவுண்டன்பாளையத்தில் தனியாா் பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவா் படுகாயமடைந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஏத்தாப்பூரை அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள தனியாா் பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவா், செல்லிடப்பேசியைப் பயன்படுத்தி ஆசிரியைகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியா்கள் கண்டித்ததால் மனமுடைந்த மாணவா், பள்ளியின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளாா். இதில் அவருக்கு இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டு, சேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இச் சம்பவம் குறித்து பள்ளி முதல்வா் அளித்த புகாரின் பேரில், ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்கிடையே, ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, காவல் துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் மாணவரின் பெற்றோா் புகாா் மனு அளித்துள்ளனா்.