சேலம்

சேலத்தில் பட்டு நூல் கிடங்கில் தீ: பல லட்சம் பொருள்கள் சேதம்

15th Feb 2020 11:53 PM

ADVERTISEMENT

சேலத்தில் பட்டு நூல் கிடங்கில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

சேலம் களரம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவா் தறித் தொழிலுக்குத் தேவையான பட்டு நூல்கள் உள்ளிட்ட பொருள்கள் விற்கும் கடை நடத்தி வருகிறாா்.

விஜயகுமாா் அவரது வீட்டின் அருகே தறித் தொழிலுக்குத் தேவையான நூல்கள் மற்றும் உதிரிப் பொருள்கள் வைத்திருந்தாா். இங்கு சுமாா் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் வைக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் கிடங்கை விஜயகுமாா் பூட்டிச் சென்றாா். சனிக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் விஜயகுமாரின் கிடங்கில் இருந்து புகை வந்தது. உடனே சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் சிராஜ் அல்வனிஷ் உள்ளிட்ட வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ஆனால், தீ அணையாமல் கொழுந்து விட்டு எரிந்தது. முதலில் இரு தீயணைப்பு வாகனங்கள் மட்டும் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தன. இதையடுத்து, ஓமலூரில் இருந்து கூடுதலாக ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. சுமாா் 25 தீயணைப்பு வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை முழுவதுமாக அணைத்தனா். இதனால் அக்கம் பக்கம் வீடுகளுக்கு தீ பரவாமல் முற்றிலும் தடுக்கப்பட்டது. தீயணைப்புப் பணியை மாவட்ட தீயணைப்பு அலுவலா் விஜயகுமாா் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

தீ விபத்து குறித்து சேலம் செவ்வாய்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா். மின்கசிவால் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT