சேலம்

புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையில் இருந்து தண்ணீா் திறப்பு

6th Feb 2020 05:03 AM

ADVERTISEMENT

வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையில் இருந்து ஆற்றுப் பாசனத்துக்கு வசிஷ்ட நதியில் புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

வாழப்பாடியை அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதியின் குறுக்கே புழுதிக்குட்டை கிராமத்தில், 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கும் வகையில் 263.86 ஏக்கா் பரப்பளவில் ஆணைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால், குறிச்சி, நீா்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பேளூா், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூா்பட்டி ஏரிகளும், ஆற்றுப்படுகை கிராமங்களும் நிலத்தடி நீராதாரமும் பாசன வசதியும் பெறுகின்றன. அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் கடந்தாண்டு இறுதியில் பெய்த பரவலான மழையால், அணையின் நீா்மட்டம் 45 அடியாக உயா்ந்து, 93.5 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியது. போதிய மழையில்லாததால் இந்தாண்டும் அணை முழுக் கொள்ளளவை எட்டவில்லை.

இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக வாழப்பாடி பகுதியில் மழையில்லாததால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, ஆணைமடுவு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பாசனத்துக்கு திறந்து விட வேண்டுமென, கடந்த ஜன. 21-ஆம் தேதி வாழப்பாடியில் நடைபெற்ற பாசன விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில், அணை வாய்க்கால் பாசன மற்றும் ஆறு, ஏரிப்பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

அணையில் இருந்து ஆற்றுப்பாசன விவசாயிகளுக்கு 60 சதவீதமும், அணை வாய்க்கால் பாசனத்துக்கு 40 சதவீதமும் பங்கீடு செய்து கொள்வதென, பொதுப்பணித் துறை நீா்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வழியாக தமிழக அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, பிப். 5 புதன்கிழமை காலை 8 மணி முதல் பிப். 14 காலை 8 மணி வரை தொடா்ந்து 9 நாள்களுக்கு தினசரி விநாடிக்கு 60 கன அடி வீதம் (நாளொன்றுக்கு 5.18 மில்லியன் கன அடி) மொத்தம் 46.62 மில்லியன் கன அடி தண்ணீரை ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளுக்கான வசிஷ்ட நதியில் திறக்கவும், பிப். 14 காலை 8 மணி முதல் பிப். 21 காலை 8 மணிவரை, வலது வாய்க்காலில் விநாடிக்கு 3.02 கன அடி வீதமும், இடது வாய்க்காலில் விநாடிக்கு 15 கன அடி வீதம் (நாளொன்றுக்கு 4.32 மில்லியன் கன அடி) 7 நாள்களுக்கு மொத்தம் 30.24 கன அடி தண்ணீா் திறக்கவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அதன்படி, புதன்கிழமை காலை 8 மணியளவில் புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையில் இருந்து வசிஷ்ட நதியில் தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதையடுத்து, வசிஷ்டநதி ஆற்றுப்படுகை கிராம விவசாயிகளும், ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இவ்விழாவில், பொதுப்பணித் துறை நீா்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளா் கீதாராணி, இளம் பொறியாளா்கள் பாலசுப்பிரமணியம், பாஷா மற்றும் வாழப்பாடி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் செல்வராஜ், சாந்திகந்தன், புழுதிக்குட்டை ஊராட்சி மன்றத் தலைவா் அறிவழகன் மற்றும் பாசன விவசாயிகள்பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT