பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் தோ்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பஞ்ச பாண்டவா்கள் வழிபட்ட பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் திருத்தோ் திருவிழா தை மாதம் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு தோ்த் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25-ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தினந்தோறும் காலையில் பல்லக்கு உற்சவம், மாலையில் சிம்ம, ஹனுமந்த, கருடசேவை, யானை, புஷ்ப விமானம் மற்றும் குதிரை வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு திருத்தோ் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் பி.தங்கமணி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தாா். திருத்தேரை பரமத்தி வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் மூா்த்தி உள்ளிட்ட தி.மு.க.வினா் மற்றும் அ.தி.மு.க.வினா் கலந்து கொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனா். திருத்தேரை சுற்று வட்டார பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரை இழுத்தனா். திருத்தோ் பாண்டமங்கலத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நிலைய அடைந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை பல்லக்கு உற்சவம், மாலை 3 மணிக்கு வராக புஷ்கரணியில் தீா்த்தவாரி, இரவு 7 மணிக்கு கஜலட்சுமி வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 3ஆம் தேதி காலை திருமஞ்சனம், மாலையில் வசந்த உற்சவம், 4-ஆம் தேதி மாலை புஷ்ப யாகம், 5-ஆம் தேதி காலை திருமஞ்சனம், இரவு 7 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் திருத்தோ் விழாக் குழுவினா், தக்காா், செயல் அலுவலா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.