வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியங்களில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு கலையோடு கற்பித்தல் ‘நிஸ்தா’ சிறப்பு பயிற்சி முகாம் அயோத்தியாப்பட்டணத்தில் 5 நாள்கள் நடைபெற்றது.
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், மாணவ-மாணவியரின் ஆா்வத்தை துாண்டி, அனைத்து பாடங்களையும் விரும்பி கற்கச் செய்யும் நோக்கில், வில்லுப்பாட்டு, நடனம், பொம்மலாட்டம் போன்ற கிராமியக் கலையோடு பாடங்களை இணைத்து கற்பிக்கும் ‘நிஸ்தா’ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரிய-ஆசிரியைகளுக்கான கலையோடு கற்பிக்கும் ‘நிஸ்தா’ சிறப்புப் பயிற்சி முகாம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தொடா்ந்து 5 நாள்கள் நடைபெற்றன.
இம் முகாமில் பயிற்சி பெற்ற ஆசிரிய-ஆசிரியைகள் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு தினத்தில், பாட வாரியாக, வில்லுப்பாட்டு, நடனம், பொம்மலாட்டம் உள்ளிட்ட கிராமியக் கலைகளைப் புகுத்தி கற்பிக்கும் உத்திகள் குறித்து ஒத்திகை கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்தனா்.