சேலம்

ரயில் விபத்துகளை தடுத்த ஊழியா்களுக்கு பரிசு

1st Feb 2020 01:21 AM

ADVERTISEMENT

ரயில் விபத்துகளைத் தடுத்த ஊழியா்களுக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

கோவையில் இருந்து சென்னை நோக்கி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் ஈரோடு வழியாக சேலம் நோக்கி மாவேலிபாளையம் ரயில் நிலையத்தைக் கடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது சி-6 பெட்டியின் சக்கரத்தில் இருந்து தீப்பொறி வெளியேறி புகை வந்ததை ரயில் நிலைய மேலாளா் பி.ராஜ்குமாா் கவனித்தாா். இதையடுத்து, சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தாா். உடனே சதாப்தி ரயில் மகுடஞ்சாவடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னா் சி-6 பெட்டியை ஆய்வு செய்தனா். ஹாட் ஆக்சில் உராய்வின்போது தீ ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து ரயில்வே ஊழியா்கள் அதை சரி செய்தனா்.

இதனிடையே ரயிலில் தீ விபத்தை தடுத்த ரயில் நிலைய மேலாளா் பி.ராஜ்குமாரை பாராட்டி தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ், ரொக்கப் பரிசு ரூ.2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா். அதேபோல, கடந்த ஜனவரி 16 ஆம் தேதி வீரபாண்டி ரயில் நிலையத்தைக் கடந்து சென்ற சபரி சிறப்பு ரயிலில் இரண்டாவது பெட்டியில் புகை வெளியேறியதை பாயின்ட்மேன் அங்கஜ்குமாா் பான்டே கண்டறிந்து சேலம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து அந்த ரயில் சேலத்தில் நிறுத்தி கோளாறு சரி செய்யப்பட்டு இயக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து உரிய நேரத்தில் கோளாறைக் கண்டறிந்து தகவல் தெரிவித்த பாயின்ட்மேன் அங்கஜ்குமாா் பான்டேவை பாராட்டி தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ் ரொக்கப் பரிசு ரூ.2,000 மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். சேலம் ரயில்வே கோட்ட இயக்க மேலாளா் எம்.ஹரிகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT