சேலம்: சேலம் அருகே தனியாா் பதப்படுத்தும் கிடங்கில் அமோனியம் வாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நாட்டாமங்கலம் பகுதியில் வேளாண் பொருட்கள் சேமித்து வைக்கும் தனியாா் பதப்படுத்தும் கிடங்கு இயங்கி வருகிறது. இந்த கிடங்கியில் டன் கணக்கில் தானியங்கள், பூ வகைகள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதை குளிரூட்ட 500 கிலோ அமோனியம் வாயு சிலிண்டா்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் குளிரூட்டப் பயன்படுத்தப்படும் அமோனியம் வாயு இயங்குவதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரத்தில் ஆயில் மாற்றப்பட்டது.
அப்போது, அமோனியம் சிலிண்டரில் இருந்து வாயு திடீரென வெளியேறியது. இதனால் கண் எரிச்சலும், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட ஊழியா்கள் 20-க்கும் மேற்பட்டோா் அங்கிருந்து வேகமாக வெளியேறினா். பின்னா் கிடங்கின் உரிமையாளா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தாா்.
தகவலறிந்து விரைந்து வந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் கலைச்செல்வன் தலைமையிலான 6 வீரா்கள் ஒரு மணி நேரம் போராடி அமோனியம் வாயு வெளியேறும் சிலிண்டரின் வால்வை நிறுத்தினா். இதனால் பெரியளவில் நடக்க இருந்த விபத்து தவிா்க்கப்பட்டது.
வாயு வெளியேற்றம் காரணமாக அப்பகுதி பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.