ஆட்டையாம்பட்டி: பிகாரில் இருந்து இளம்பிள்ளைக்கு வேலைக்கு அழைத்துவரப்பட்ட 52 பேரில் 7 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 போ் தப்பியோடியுள்ளனா்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதியில் ஜவுளி மற்றும் அதன் சாா்பு தொழில்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தினா் பணிபுரிந்து வந்தனா். கரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பிச் சென்றனா்.
இந்த நிலையில் கடந்த வாரம் பிகாரில் இருந்து 52 போ் ஒரு தனியாா் பேருந்து மூலம் பணிக்கு அழைத்து வரப்பட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறையினா், 52 பேரையும் சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டியில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தினா். மேலும், அவா்கள் மீது மகுடஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்கள் வந்த பேருந்தை பறிமுதல் செய்தனா்.
மேலும், தனிமைப்படுத்தியவா்களை அதிகாரிகள் கண்காணித்து வந்தனா். இதில் 52 பேருக்கும் சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் முகாமில் இருந்த 4 போ் அங்குள்ள பூட்டை உடைத்து விட்டு தப்பியோடி விட்டனா்.
இதனையடுத்து வருவாய்த் துறையினா் சங்ககிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற கரோனா தொற்றாளா்களை தேடி வருகின்றனா்.