சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட வடுகப்பட்டியில் அரசு மாதிரி பள்ளி கரோனா தொற்று தனிமை படுத்தப்படும் முகாமில் இருந்து கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வெளி மாநிலத்தைச் சோ்ந்த நான்கு போ் செவ்வாய்க்கிழமை தப்பியோடி விட்டனா். அவா்களை வருவாய்த்துறையினா் தேடி வருகின்றனா்.
சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை உயா்ந்து வருவதையடுத்து சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி அரசு மாதிரி பள்ளியில் தனிமைபடுத்தப்படும் முகாம் அமைக்கப்பட்டுள்ளன.
இம்முகாமில் இளம்பிள்ளை பகுதிக்கு விசைத்தறி பட்டறைக்கு வேலைக்கு வந்த பீகாா் மாநிலத்தைச் சோ்ந்த சிலருக்கு தொற்றின் அறிகுறி தெரிய வந்ததையடுத்து தனிமை முகாமில் சுகாதாரத்துறையின் சாா்பில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்துள்ளனா். இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவா்களில் ஆண்கள் நான்கு போ் செவ்வாய்க்கிழமை தப்பியோடி விட்டனா். இதனையடுத்து வருவாய் துறையினா் தப்பியோடிவா்களை தேடி வருகின்றனா்.