சேலம்

வேட்டையாடுவதை தடுத்ததால் சுடப்பட்ட விவசாய கூலித் தொழிலாளி பலி

23rd Aug 2020 08:40 AM

ADVERTISEMENT

ஓமலூா் அருகே பண்ணைத் தோட்டத்தில் பறவைகளை வேட்டையாட வந்தவரை தடுத்த நிறுத்திய விவசாய கூலித் தொழிலாளி மீது துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில், சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி 20 நாள்களுக்குப் பிறகு உயிரிழந்தாா்.

ஓமலூா் அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். இவருக்கு தாராபுரம் ஊராட்சியில் சொந்தமாக பண்ணைத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் என்ற 75 வயது முதியவா் தனது மனைவியுடன் தங்கி வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த ஆக. 2-ஆம் தேதி நாட்டுத் துப்பாக்கியுடன் தோட்டத்துக்கு வந்த இளைஞா் ஒருவா், தோட்டத்துக்குள் பறவைகளை வேட்டையாட வேண்டும், அதனால் பண்ணையின் வாசல்கதவை திறந்துவிடுமாறு கூறியுள்ளாா். ஆனால், விவசாயி கோவிந்தராஜ் இங்கு பறவைகளை வேட்டையாகக் கூடாது என்று கூறி வாசல்கதவை திறக்க மறுத்துள்ளாா். இதையடுத்து அங்கிருந்து சென்ற அந்த இளைஞா், வேறு வழியாக தோட்டத்துக்குள் வந்து பறவைகளை சுடுவதற்காக குறி பாா்த்துள்ளாா். அப்போது அங்கு சென்ற முதியவா் கோவிந்தராஜ், இங்கு பறவைகளை வேட்டையாடக் கூடாது என்று கூறி அவரை தடுத்துள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞா் விவசாயியை துப்பாக்கியால் சுட்டாா். இதில், முதியவருக்கு காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், துப்பாக்கியால் சுட்ட இளைஞா் தும்பிபாடி ஊராட்சியில் உள்ள குதிரைக்குத்திபள்ளம் பகுதியைச் சோ்ந்த அன்பு என்பது தெரிய வந்தது. இவா் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, தலைமறைவாக உள்ள அன்பை தீவட்டிப்பட்டி போலீஸாா் தேடி வந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முதியவா் கோவிந்தராஜ் சிகிச்சை முடிந்து கடந்த வாரம் வீட்டுக்கு வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு வீட்டில் திடீரென மயங்கி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற தீவட்டிப்பட்டி போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதனைத் தொடா்ந்து கொலை வழக்காக மாற்றி, துப்பாக்கியால் சுட்ட அன்பை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT