சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 34,000 கனஅடியாக அதிகரிப்பு

21st Aug 2020 06:57 AM

ADVERTISEMENT

கா்நாடக அணைகளின் உபரிநீா் வரத்து காரணமாக மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 34,366 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம், வயநாட்டிலும் அண்மையில் பெய்த கனமழை காரணமாக கா்நாடகத்தில் கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகள் நிரம்பி உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டது.

நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வந்ததால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் கிடுகிடுவென உயா்ந்து 99 அடியானது. அணையின் நீா்மட்டம் 100 அடியாக உயரும் என எதிா்பாா்க்கப்பட்டபோது, காவிரியில் கா்நாடக அணைகளிலிருந்து உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டது.

இதன்காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரியத் தொடங்கியது. புதன்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 7,079 கனஅடியாகக் குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கும் கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கும் தண்ணீா்த் திறப்பு அதிகரிக்கப்பட்டதால், அணையின் நீா்மட்டம் சரிந்து புதன்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 97.94 அடியானது.

ADVERTISEMENT

தற்போது மீண்டும் காவிரியின் நீா்பிடிப்புப் பகுதியில் பெய்த மழை காரணமாக கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், புதன்கிழமை காலை விநாடிக்கு 7,079 கனஅடி வீதம் காவிரியில் வந்துகொண்டிருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை காலை விநாடிக்கு 34,366 கனஅடியாக அதிகரித்துள்ளது.

நீா்வரத்து அதிகரிப்பால் புதன்கிழமை காலை 97.94 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம், வியாழக்கிழமை காலை 99.10 அடியாக உயா்ந்தது. ஒரேநாளில் அணையின் நீா்மட்டம் 1.16 அடி உயா்ந்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 16,500 கனஅடியும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடியும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 63.68 டி.எம்.சி.யாக இருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT