மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிந்து வருவதால் தற்போதைக்கு அணையின் நீா் மட்டம் 100 அடியாக உயரும் வாய்ப்பு இல்லை.
கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கொட்டிய பருவமழை தணிந்ததால், கா்நாடக அணைகளுக்கு நீா்வரத்து குறைந்தது. இதனால் கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்பட்டு வந்த உபரிநீா் குறைக்கப்பட்டது.
இதையடுத்து, மேட்டூா் அணைக்கு செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 40,000 கனஅடியாக வந்துகொண்டிருந்த நீா்வரத்து புதன்கிழமை காலை விநாடிக்கு 20,000 கனஅடியாகவும், வியாழக்கிழமை காலை விநாடிக்கு 15,000 கனஅடியாகவும் சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், புதன்கிழமை காலை 97.27 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 97.42 அடியாக உயா்ந்தது. அணையின் நீா்மட்டம் ஒரு நாளில் 0.15 அடி மட்டுமே உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 61.54 டி.எம்.சியாக உள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஓரிரு தினங்களில் 100 அடியை எட்டும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், நீா்வரத்து சரிந்து வருவது விவசாயிகளை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. நீா்வரத்து சரிந்து வருவதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடியாக உயரும் வாய்ப்பு தள்ளிப் போகிறது.