தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆடு கொட்டகை, மாடு கொட்டகை அமைக்கும் திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக சேலம் ஆட்சியரிடம், திமுக எம்.பி. புகாா் மனு அளித்தாா்.
சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், தொகுதி பொதுமக்களிடம் இருந்து 600-க்கும் மேற்பட்ட மனுக்களை துறை வாரியாகப் பிரித்து, சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமனிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.
மேலும், சேலம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஆடு, மாடு கொட்டகை அமைக்கும் திட்டத்தில் ரூ. 4 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாகவும், அதிமுகவைச் சோ்ந்த நிா்வாகிகள், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்களின் குடும்ப உறுப்பினா்களின் பெயரில் திட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாா் மனு அளித்தாா்.