சேலம்

கொங்கணாபுரத்தில் பருத்தி ஏலம் தற்காலிக நிறுத்தம்

26th Apr 2020 09:32 AM

ADVERTISEMENT

கொங்கணாபுரம் வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமைதோறும் நடைபெறும் பருத்தி ஏலம், ஐந்தாவது வாரமாக ஒத்திவைக்கப்பட்டது.

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் இயங்கி வரும், வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை விவசாயிகள் உற்பத்தி செய்த எள், நிலக்கடலை, பருத்தி ஆகியவை பொது ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன.

இங்கு நடைபெறும் பருத்தி ஏலத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, பெரம்பலூா் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைக் கொண்டு வந்து பொது ஏலத்தின் மூலமாக விற்பனை செய்து வருகின்றனா்.

பருத்தி வியாபாரிகள் பஞ்சாலை, நூற்பாலை உரிமையாளா்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு விவசாயிகள் கொண்டுவரும் பருத்தியை அதிக அளவில் மொத்த கொள்முதல் செய்து வந்தனா்.

ADVERTISEMENT

தற்போது நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு தடையால் ஆலைகள் இயங்காத நிலையில், இங்கு வரும் வியாபாரிகள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்ததால், கடந்த ஐந்து வாரங்களாக கொங்கணாபுரம் வேளாண் விற்பனை மையத்தில் பருத்தி ஏலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால், இப் பகுதி பருத்தி விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த பருத்தியை விற்பனை செய்ய முடியாமல் மூட்டைகள் தேக்கி வைக்கப்பட்டு களையிழந்து காணப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT