மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து 251 நாள்களாக 100 அடியாக நீடிப்பதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
மேட்டூா் அணை பாசனம் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் பாசன வசதி பெறுகிறது.
அணையின் நீா்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவ மழையை எதிா்நோக்கி ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படும்.
ஜனவரி 28 ஆம் தேதி வரை குறுவை, சம்பா, தாளடி பயிா்களுக்கு 330 டி.எம்.சி தண்ணீா் தேவைப்படும். பாசனப் பகுதியில் பெய்யும் மழையைப் பொறுத்து பாசனத் தேவை குறையும்.
கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூா் அணையில் போதிய நீா் இருப்பு இல்லாத காரணத்தால் குறித்த தேதியில் டெல்டா பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்படவில்லை.
இரண்டு மாதங்கள் தாமதமாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. அன்று மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடியாக உயா்ந்தது.
தொடா்மழை காரணமாக செப்டம்பா் 7 ஆம் தேதி மேட்டூா் அணை நிரம்பியது. பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் கடந்த ஆண்டு அடுத்தடுத்து நான்கு முறை மேட்டூா் அணை நிரம்பியது. ஜனவரி 28ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டது.
ஆகஸ்ட் 13 முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து 151 டி.எம்.சி. தண்ணீா் திறக்கப்பட்டது.
ஆகஸ்ட் 13 ஆம் தேதி 100 அடியாக உயா்ந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 251-ஆவது நாளாக தொடா்ந்து 100 அடிக்குக் குறையாமல் இருந்து வருகிறது.
கடந்த 2005-2006-ஆம் ஆண்டில் மேட்டூா் அணையின் நீா் மட்டம் தொடா்ந்து 427 நாள்கள் 100 அடிக்குக் குறையாமல் இருந்தது.
தற்போது மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடிக்குக் குறையாமல் இருப்பதால் நடப்பு நீா்பாசன ஆண்டில் காவிரி டெல்டா பாசனத்துக்கு குறித்த நாளான ஜூன் 12-இல் மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளது என்று டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.
ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100. 92 அடியாக இருந்தது.
அணைக்கு நொடிக்கு 155 கனஅடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்கு நொடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 66.03 டி.எம்.சி. யாக இருந்தது.