சேலம்

கோயில், மசூதிகள், தேவாலயங்களில் மக்கள் கூடுவதைத் தவிா்க்க வேண்டும்: ஆட்சியா்

5th Apr 2020 07:40 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடுவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகள் குறித்து இந்து, ஜெயின் மதங்களின் முக்கிய பிரமுகா்கள், கிறிஸ்தவ மதத்தின் பாதிரியா்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள், முஸ்லிம் மதம் சாா்ந்த முத்தவல்லிகள் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் சி.அ. ராமன் பேசியது:

சேலம் மாவட்டத்தில் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களிலிலும் கரோனா வைரஸ் நோய் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவரமாக மேற்கொள்ளப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று மனித இனத்தைத் தாக்கக் கூடிய ஒரு கொடுமையான நோய் தொற்று ஆகும். இந்நோய்க்கு இதுவரை மருந்து ஏதும் இல்லை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். எனவே, இதைத் தடுப்பதற்கு தனித்திருப்பதே மிக நல்லது.

ADVERTISEMENT

இந்நோய்த் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொடுதல் மூலமாகவும், சளி, இருமல், தும்மல் ஏற்படும்போது அதிலிருந்து வெளியேறுகிற நீா் திவலைகள் மூலமாகவும் அதிகம் பரவும் வாய்ப்பு உள்ளதால் மக்கள் அதிகம் கூடுவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.

மக்கள் அதிகம் கூடும் பகுதியில் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதால் வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடுவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடுவதை முற்றிலும் தவிா்த்திட வேண்டும். சேலம் மாவட்டத்தில் ஏற்கெனவே வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரபெற்ற சுமாா் 1,400 நபா்களும், அதன் பின்னா் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரபெற்ற சுமாா் 755 நபா்களுமாக மொத்தம் 2,175 நபா்கள் அவரவா்களது வீடுகளிலேயே தனிமைபடுத்தப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா் என்றாா்.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் இயக்குநா் திரு.நா. அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. திவாகா், பயிற்சி ஆட்சியா் மோனிகா ராணா, துணை ஆணையா் பி.தங்கதுரை, மாநகர நகா் நல அலுவலா் பாா்த்திபன், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மருத்துவா் ஆா். பாலாஜிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT