சேலத்தில் வீட்டுமனை கிரயம் செய்து தருவதாகக் கூறி மூன்று பெண்களிடம் ரூ. 65 லட்சம் பணமோசடி செய்த நபரை போலீஸார் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் உ. பூபதி (33). இவர், மெய்யனூரைச் சேர்ந்த இரண்டு பெண்களிடம் வீட்டு மனைகள் கிரயம் செய்து தருவதாகக் கூறி ரூ. 40 லட்சத்தை பெற்று கிரயம் செய்து தராமல் ஏமாற்றியுள்ளார்.
மேலும் நரசோதிப்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் இதேபோல் வீட்டுமனை கிரயம் செய்து தருவதாகக் கூறி ரூ. 25 லட்சத்தை வாங்கி ஏமாற்றியுள்ளார். அந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து பூபதியை கைது செய்ய சென்ற காவல் ஆய்வாளரை தள்ளிவிட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து அழகாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து பூபதியை கைது செய்தனர்.
பின்னர் பிணையில் வெளியே வந்த பூபதி கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி அழகாபுரத்தில் தனியாக வசித்து வரும் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து அவரை கொலை செய்ய முயற்சித்தார்.
இந்த நிலையில், பூபதி தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களின் பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் நடந்து கொண்டதால் குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு காவல் துணை ஆணையர் எஸ். செந்திலின் பரிந்துரைப்படி காவல் ஆணையர் த. செந்தில் குமார் பூபதியை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சனிக்கிழமை ஆணை பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து பூபதி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.