ராஷ்ட்ரிய போஷன் மா என்ற ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு போஷன் அபியான் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் சி.அ. ராமன் சனிக்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போஷன் அபியான் தேசிய ஊட்டச்சத்து மாபெரும் விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் துவக்கி வைத்தார்.
இந்தப் பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி திருவள்ளுவர் சிலை வழியாக மாநகராட்சி அலுவலக சாலை, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலை வழியாக மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு வந்தடைந்தனர்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் பரிமளா தேவி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.