ரூ.24 கோடியில் புதுபொலிவு பெறும் சேலம் ரயில் நிலையம்!

ரூ.24 கோடியில் புதுபொலிவு பெறும் சேலம் ரயில் நிலையம்!

சேலம் ரயில் நிலையத்தில் முதற்கட்ட மேம்பாடு பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இரண்டாம் நுழைவுவாயிலுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் 5 அடுக்குமாடி கட்டடம், நடைமேடை சீரமைப்பு என


சேலம் ரயில் நிலையத்தில் முதற்கட்ட மேம்பாடு பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இரண்டாம் நுழைவுவாயிலுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் 5 அடுக்குமாடி கட்டடம், நடைமேடை சீரமைப்பு என இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பணிகள் ரூ. 24.25 கோடியில் நடைபெற்று வருகின்றன.
நாடு முழுவதும் சுமார் 68 ரயில் நிலையங்களை மேம்படுத்த ரயில்வே துறை முடிவெடுத்தது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் தெற்கு ரயில்வேயில் சென்னை எழும்பூர், பாலக்காடு, திருச்சி உள்ளிட்ட 5 ரயில் நிலையங்களை மேம்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் சேலம் கோட்டத்துக்குள்பட்ட சேலம் ரயில் நிலையத்தை மேம்படுத்திட ரூ. 24.25 கோடி நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், முதற்கட்டமாக சேலம் ரயில் நிலையத்தின் நுழைவுவாயில் தொடங்கி கட்டடத்தை புதுப்பித்தல், மின் விளக்கு அலங்காரம், பூங்கா என அனைத்தும் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயில் நிலையத்தின் உள்ளே வரும் பாதையில் பயணிகளின் கார், மோட்டார் சைக்கிள், பேருந்து, ஆட்டோ, வாடகை கார்கள் செல்ல தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பயணிகளை ஏற்றி செல்ல வருவோர் கார்களை நிறுத்தி ஏற்றி செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளது.
நீண்ட நேரம் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வைக்க அனுமதிக்கப்படாது. மேலும் பூங்கா, பயணிகள் பேருந்து நிழற்குடை முதல் அனைத்தும் நவீன காலத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. பயணிகள் வந்து செல்ஃபி எடுத்துச் செல்ல வெர்டிகல் கார்டன் நிறுவப்பட்டுள்ளது.
முதல்கட்டப் பணிகள் நிறைவு... ரயில் நிலையத்தில் முதற்கட்ட மேம்பாட்டு பணிகள் சுமார் ரூ. 5.2 கோடியில் முடிக்கப்பட்டுள்ளன. சேலம் ரயில் நிலையத்தின் முகப்பு பகுதி இரவு நேரத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்னொளி வடிவமைப்புக்கு மட்டும் சுமார் ரூ.1.2 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதனிடையே முதற்கட்ட பணிகள் நிறைவு பெற்று, சேலம் ரயில் நிலையம் புதுபொலிவு பெற்ற நிலையில் பயணிகளை கவரும் வகையில் கட்டுமான வடிவமைப்பு அமைந்துள்ளது. 
தற்போது இரண்டாம் கட்டமாக நடைமேடை எண் 5 இல் நவீன முறையில் மேற்கூரை அமைக்கப்பட உள்ளது. மேலும் நகரும் படிகட்டு (எஸ்கலேட்டர்) மின்தூக்கி (லிப்ட்) ஆகியவையும் நிறுவப்பட உள்ளது. இதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் நடைமேடை எண் 3 மற்றும் 4 இல் பயணிகள் வசதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரயில்வே துறையின் முக்கிய அலுவலகங்கள் அனைத்தும், சேலம் ரயில் நிலையத்தின் இரண்டாவது நுழைவு வாயிலுக்கு மாற்றப்பட உள்ளது.
இதற்காக இரண்டாவது நுழைவு வாயிலில் சுமார் 5 மாடி கட்டடம் கட்டப்பட உள்ளது. பயணிகளுக்காக உணவக வசதி, பல்வேறு வணிக கடைகளும் அமைக்கப்பட உள்ளன.
மேலும் முதலாவது நுழைவு வாயிலில் மேல்தளத்தில் இயங்கி வரும் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையமும், இரண்டாவது நுழைவுவாயிலுக்கு மாற்றப்பட உள்ளது. அரசுப் போக்குவரத்துப் பேருந்துகள், கார்கள், மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்கு தனி வாகன நிறுத்தும் வசதி செய்யப்பட உள்ளது.
இதுதவிர இரண்டாவது நுழைவு வாயிலில் இருந்து 5 மற்றும் 3-4 ஆகிய நடைமேடைகளுக்கு எளிதில் வரும் வகையில் நகரும் படிகட்டு வசதி செய்து தரப்படும். முதலாவது நுழைவு வாயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வரும் நிலையில், இரண்டாவது நுழைவுவாயிலை பயணிகள் எளிதில் வந்து போகும்படி சேலம் ரயில்வே கோட்டம் மாற்ற உள்ளது.
இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு. சுப்பாராவ் கூறியது:சேலம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு ரூ. 24.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட பணிகளான ரயில் நிலைய முகப்புப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு புதுபொலிவுடன் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட பணிகள் சுமார் ரூ. 5.2 கோடி மதிப்பில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
 அதேபோல இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட பணிகளும் தொடர்ந்து நடைபெற உள்ளது. முதலாவது நுழைவுவாயிலில் கடும் வாகன நெரிசல் காரணமாக,  இரண்டாவது நுழைவுவாயிலுக்கு முக்கியத்துவம் தந்து வருகிறோம்.இரண்டாவது நுழைவுவாயிலை பொதுமக்கள் பயன்படுத்தும்போது அங்கு பேருந்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பயணிகளுக்கு செய்து தரப்படும். இந்த பணிகள் வரும் 2020-இல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com