சேலம்

நகைகள் திருட்டு வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது: 12 பவுன் நகைகள் பறிமுதல்

13th Sep 2019 10:03 AM

ADVERTISEMENT

சங்ககிரியில் சந்தைக்கு சென்ற பெண்ணிடமிருந்து நூதன முறையில் நகைகளைத் திருடிச் சென்ற கணவர், மனைவி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 பவுன் நகைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
 சங்ககிரி சந்தைபேட்டை, பால்வாய்த் தெரு, பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மனைவி புஷ்பா (60). கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி சந்தைக்குப் பொருள்கள் வாங்க நடந்து சென்ற இவரிடம் அடையாளம் தெரியாத இரு பெண்கள் சென்று சந்தைக்குள் திருடர்கள் இருப்பதால் உங்கள் நகைகளை பைக்குள் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினர்.
 அதை நம்பிய புஷ்பா, அவர் அணிந்திருந்த மூன்றரை பவுன் செயின், அரை பவுன் தோடு ஆகியவற்றை பைக்குள் போட்டு வைத்து விட்டு அவரது வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அதில் தங்க நகைகளுக்கு பதில் கவரிங் நகைகள் இருந்தது தெரியவந்தது.
 இது குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
 இந்த நிலையில், சங்ககிரி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஒரு காரினை நிறுத்தி விசாரணை நடத்தியதில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், கட்டமடுவு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் குபேந்திரன் (28) இவரது மனைவி ஸ்வர்ணா (22), குபேந்திரன் சகோதரர் வீரபாண்டியன் (22), குபேந்திரனின் மாமியார் நஞ்சம்மா (50) ஆகியோர் இருந்தனர்.
 மேலும் அவர்கள்தான் சங்ககிரியில் புஷ்பாவிடம் நகைத் திருடியது என்பதும், இதுபோல விழுப்புரம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள வாழப்பாடி, ஒசூர், பெங்களூரு, வந்தவாசி, கவுந்தப்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காரை வைத்துக் கொண்டு பொதுமக்களிடம் நகைகளை நூதன முறையில் திருடியதும் தெரியவந்துள்ளது. போலீஸாரிடம் பிடிப்பட்ட நான்கு பேர் அளித்த தகவலின் பேரில் வாழப்பாடியில் திருடிய 3 பவுன், மேட்டூரில் 5 பவுன், சங்ககிரி வழக்கில் 4 பவுன் உள்பட மொத்தம் 12 பவுன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்து நான்கு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT