சேலம்

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

10th Sep 2019 10:42 AM

ADVERTISEMENT

தலைமை நீதிபதி வி.கே. தஹில ராமாணீ பணியிடமாற்றத்தை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள வழக்குரைஞர்கள் செப்டம்பர் 10-ஆம் தேதி நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுவதாக வழக்குரைஞர் சங்கங்கள் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்கள் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் வழக்குரைஞர் எஸ்.கே. வேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் பொன்னுசாமி, மூர்த்தி, பொன்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வந்த வி.கே. தஹில ராமாணீயை சிறிய மாநிலமான மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்தது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. அதனால், உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளக் கூடாது.
அவரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும். மேலும் தனது பதவியை ராஜிநாமா செய்ததை தலைமை நீதிபதி வி.கே. தஹில ராமாணீ மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இதையடுத்து தலைமை நீதிபதி வி.கே. தஹில ராமாணீயை சென்னையிலேயே தொடர்ந்து பணியாற்ற உத்தரவிட வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்குரைஞர்கள் செப்டம்பர் 10-ஆம் தேதி நீதிமன்ற பணியில் ஈடுபடாமல் புறக்கணிப்பில் ஈடுபடுவர் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வழக்குரைஞர்கள் சந்திரசேகர், இமயவரம்பன், சாரதா தேவி, ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT